மணிப்பூர் கலவரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி!? – அமித்ஷாவை சந்தித்த முதல் மந்திரி நம்பிக்கை!
மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே நடந்து வரும் கலவரத்தில் விரைவில் நல்ல முடிவை எட்ட உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மணிப்பூர் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மை வகிக்கும் இரு சமூக பிரிவினர்களிடையே பழங்குடி இனத்தோராக அறிவிப்பதில் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய இந்த கலவரம் இன்றும் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பியும் அங்கு கலவரங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டே உள்ளது. இதுவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முறை மணிப்பூருக்கு பயணம் செய்துள்ளார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எப்பாடுப்பட்டாவது மணிப்பூரில் கலவரத்தை நிறுத்தி தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பேசியுள்ளார்.
அமித்ஷா சந்திப்புக்கு பின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மணிப்பூர் மக்களின் நலன் கருதி மத்திய அரசு விரைவில் முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக கலவரம் கட்டுப்படுத்தப்படாமல் உள்ள நிலையில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வந்து ராணுவத்தை முழுமையாக கொண்டு வந்து வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன.
Edit by Prasanth.K