காஷ்மீரை தாரை வார்த்தவர் ஜவஹர்லால் நேரு: அமித்ஷா பாய்ச்சல்
”காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவிடம் இல்லாமல் போனதுக்கு நேருதான் காரணம்” என லோக் சபாவில் ஆவேசமாக பேசியிருக்கிறார் அமித்ஷா.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்வதற்கான தீர்மானம், சர்வதேச எல்லைக்கோட்டில் வாழும் மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்குவதற்கான தீர்மானம் ஆகியவற்றை இன்று லோக் சபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு செய்வது பற்றி காங்கிரஸார் இடையே அதிருப்தி எழுந்ததாக தெரிகிறது. அப்போது காங்கிரஸ் எம்.பி ஒருவர் பா.ஜ.க காஷ்மீரை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியில் வைப்பதன் மூலம் அங்கே பதற்றசூழலை ஏற்படுத்துகிறது என பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அமித்ஷா “ஜம்மு காஷ்மீரில் பாஜக வன்முறையை கட்டவிழ்ப்பதாக சிலர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதுவரை 356வது பிரிவின்படி காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 132 முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 93 முறை அதை செய்தவர்கள் காங்கிரஸ்தான். அந்த காங்கிரஸ்தான் இப்போது ஜனநாயகம் பற்றி எனக்கு பாடம் எடுக்கிறார்கள்.
பாகிஸ்தானுடன் யுத்தத்தை நிறுத்தி ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை தாரை வார்த்தவர் யார்? ஜவஹர்லால் நேருதானே! ஜமாத் இஸ்லாமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்காமல் இருந்தீர்களே யாரை திருப்திப்படுத்த அதை செய்தீர்கள்?
இந்தியா என்ற பெயரை காஷ்மீரில் உபயோகிக்கவே முடியாத ஒரு காலம் இருந்தது. அந்த காலத்திலேயெ ஜம்மு காஷ்மீரில் சென்று இந்திய தேசிய கொடியை நட்டார்கள் மனோகர் ஜோஷியும், நரேந்திர மோடியும். அப்போது பாஜக ஆட்சியில் கூட இல்லை.
எங்களை காஷ்மீர் விரோதிகளாக சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் காஷ்மீர் மக்களுக்காக அயராது சிந்தித்து பணியாற்றி கொண்டிருக்கிறோம்” என பேசியுள்ளார்.