வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (12:35 IST)

இந்தியாவின் வெற்றியை கொண்டாடியபோது விபரீதம் – தலித் இளைஞர் எரித்து கொலை

உத்தர பிரதேசத்தில் இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதை கொண்டாடியபோது ஏற்பட்ட தகராறில் தலித் இளைஞர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் வினய் பிரகாஷ். நேற்று இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. இதில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல நகரங்களிலும் மக்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டங்களோடு கொண்டாடினர்.

அதுபோலவே ராம்பூர் நகர் இளைஞர்களும் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து ஆட்டம் பாட்டத்தோடு குதூகலமாக இருந்துள்ளனர். அப்போது வினய் பிரகாஷுக்கும், வேறு சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் சண்டை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அருகிலிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ராம்பூர் கிராமத்தின் எல்லை பகுதியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே தலித் இளைஞர் வினய் பிரகாஷ்தான் பிணமாக கிடக்கிறார் என்பதை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முன்னிரவு சண்டையில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.