கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து 80 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஹட்கோட்டி , பௌண்டா சாஹிப் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அதேபோல் மண்டியில் 38 சாலைகள், குலுவில் 14 சாலைகள், சிம்லாவில் 5 சாலைகள் என பல சாலைகள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மற்ற சாலைகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
ஜூலை 12ஆம் தேதி வரை சிம்லாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆபத்தான பகுதிகளில் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பல சாலைகள் சிம்லாவில் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதும் அவசர இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva