வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (14:21 IST)

மனைவி, தாய் என 8 பேர் வெட்டி கொலை.! கோடாரியால் வெட்டிய இளைஞரும் தற்கொலை..!!

Murder
குடும்பத் தகராறில் தாய், மனைவி, சகோதரி என 8 பேரை வெட்டிக் கொன்ற இளைஞர் ஒருவர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், போடல் கச்சார் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கும், அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று இரவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த அந்த இளைஞர்,  அனைவரும் உறங்கிய பின்பு, கோடாரியால் முதலில் தனது மனைவியை வெட்டிக் கொன்றார். அதன்பின் தனது தாய், சகோதரி, சகோதரர், மைத்துனர் மற்றும் இரண்டு மருமகன்களை ஒருவர் பின் ஒருவராக கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். 
 
இவரால் தாக்கப்பட்ட 10 வயது சிறுவன் உயிர் தப்பி அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மஹுல்ஜிரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணீஷ் காத்ரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது 8  பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை வெட்டிக் கொன்ற இளைஞரை தேடினர். அப்போது அங்குள்ள மரத்தில் அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதையடுத்து கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்களையும், தற்கொலை செய்த இளைஞரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரியையும் பறிமுதல் செய்தனர். தற்கொலை செய்து கொண்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.