40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் ; ஒரு பெண் கொன்று புதைப்பு : பிகாரில் அதிர்ச்சி
குழந்தைகள் காப்பகத்தில் இருந்த பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை தட்டிக்கேட்ட பெண்ணை கொன்று புதைத்த சம்பவம் பிகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் எனும் இடத்தில் ஒரு குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த காப்பகத்தில் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில், லல்லு பிரசாத்தின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கடந்த திங்கட்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை பதிவிட்டிருந்தார்.
அதில் அந்த காப்பகத்தில் உள்ள 7 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள், அந்த காப்பகத்திற்கு நன்கொடி அளிப்பவர்களால கடந்த பல மாதங்களாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த காப்பகத்தை நடத்தும் என்.ஜி.ஓவின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர். எனவே, அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. அங்கு ஆய்வு நடத்திய மும்பை நிறுவனமும் இதை உறுதி செய்தது. எனவே, அங்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியே வந்தன.
அந்த காப்பகத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதும், இதை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து அந்த வளாகத்திலேயே புதைத்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த, அந்த காப்பக உரிமையாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.