சுவரேறி குதித்த திருடனுக்கு பெண்ணை மணமுடித்து கொடுத்த குடும்பம்
நள்ளிரவில் தங்கள் வீட்டில் சுவரேறி குதித்த ஒருவருக்கு தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பம் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் விஷால் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இருக்கும் அதே தெருவில் உள்ள குமாரி என்ற பெண்ணை காதலித்தார். இருப்பினும் இருவரும் தங்கள் காதலை தங்கள் குடும்பத்திடம் தெரிவிக்கவில்லை
இந்த நிலையில் சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த விஷால் காதலியை பார்க்க நள்ளிரவில் அவருடைய வீட்டின் சுவரேறி குதித்தார். இதை அந்த வீட்டில் உள்ள ஒருவர் பார்த்து கூச்சலிட அனைவரும் விஷாலை திருடன் என நினைத்து அடித்து உதைத்தனர். இதன்பின்னர் அங்கு வந்த குமாரி, அவர் திருடன் இல்லை என்றும் தன்னுடைய காதலர் என்றும் கூற அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இரவோடு இரவாக பஞ்சாயத்து கூடியது. பஞ்சாயத்தில் இருவரும் மேஜர் என்பதால் அவர்களது திருமணத்தை முடித்து வைக்க முடிவு செய்து உடனே திருமணமும் செய்துவைத்துவிட்டனர். நள்ளிரவில் திருடன் என நினைத்த ஒருவருக்கு காலையில் பெண்ணை கொடுத்து கல்யாணம் செய்து வைத்த குமாரி குடும்பத்தினர் குறித்து தான் அந்த பகுதியில் உள்ளவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.