திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (14:38 IST)

முலாயம் சிங் யாதவ் மறைவு: உபி-யில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.


உத்தர பிரதேசத்தில் மிகப்பெரும் அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவர் முலாயம்சிங் யாதவ். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ், லோக் சபா எம்.பியாகவும் பதவி வகித்து வந்தார்.

கடந்த ஆகஸ்டு 22ம் தேதி அன்று முலாயம் சிங் யாதவ்விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் டெல்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளித்து, சிறப்பு மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தியை முலாயம்சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.