வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (11:32 IST)

2ஜி ஸ்பெக்டரம் வழக்கின் தீர்ப்பு: செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக 200 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் ஆ.ராசா, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஆகஸ்ட் 25) அல்லது அடுத்த 10 நாட்களுக்குள் வெளியாகலாம் என இந்த வழக்கின் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருந்தார். ஆனால் தீர்ப்பு இன்னமும் தயாராகவில்லை என்பதால் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தற்போது நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.