செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)

'நோட்டா' திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ்ப்படம், தமிழக அரசியலையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்த படம் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருந்ததா? என்பதை பார்ப்போம்

முதலமைச்சர் நாசர் மீது ஒரு வழக்கு இருப்பதால் திடீரென இரவோடு இரவாக அவரது மகனான விஜய்தேவரகொண்டா முதல்வர் ஆகிறார். லண்டன் ரிட்டனான விஜய்க்கு ஒரு முதல்வரின் பணி என்ன? என்றுகூட தெரியாத நிலையில் வழக்கின் தீர்ப்பால் நாசர் சி'றைக்கு செல்கிறார். அதன்பின்னர் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தால் அதிரும் விஜய், விளையாட்டாக கிடைத்த முதல்வர் பதவியை சீரியஸாக எடுத்து அரசியல் ஆட்டம் ஆடுகிறார். அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சதுரங்க ஆட்டமே 'நோட்டா' படத்தின் மீதிக்கதை

அஜித், விஜய், சூர்யாவுக்கு போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு மாஸ் ஹீரோவாக முதல் படத்திலேயே கெத்து காட்டுகிறார் விஜய். தமிழே தெரியாது என்றாலும் சொந்தக்குரலில் பிசிறில்லாமல் டப்பிங் பேசியுள்ளார். பத்திரிகையாளர்களை மிரட்டுவது, முதல்வரான பின் அதிரடி காட்டும் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இந்த படத்தின் நாயகி மெஹ்ரினுக்கு அதிக வேலை இல்லை. ஆனால் இன்னொரு நாயகியான சஞ்சனா கேரக்டர் இப்போதுள்ள ஒரு பெண் அரசியல்வாதி சாயலில் இருப்பது ரசிக்க வைக்கின்றது.

முதல்வர் விஜய்க்கு சாணாக்கியனாக, அரசியல் கற்றுக்கொடுக்கும் குருவாக மூத்த பத்திரிகையாளர் கேரக்டர் சத்யராஜூக்கு. மேக்கப் இல்லாமல் மிக இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்.

நாசருக்கு மிகப்பொருத்தமான கேரக்டர். ஒரு உண்மையான அரசியல்வாதி போல் மிரட்டியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் ஒருசில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்.

சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். முதல் இரண்டு பாடல், கருணாகரன், யாஷிகா காட்சிகளை எடிட்டர் தயவுதாட்சண்யம் இல்லாமல் வெட்டியிருக்கலாம். படத்திற்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல் உள்ளது.

இயக்குனர் ஆனந்த்சங்கர் ஒரு விறுவிறுப்பான அரசியல் படத்தை கொடுப்பதில் கோட்டை விட்டுவிட்டார். சென்னை வெள்ளம், கூவத்தூர் ரிசார்ட், ஸ்டிக்கர் அரசியல், மருத்துவமனையில் அம்மா, ஆகிய காட்சிகளுக்கு பதிலாக சமகாலத்தில் அரசியல்வாதிகள் பல காமெடிகளை செய்தார்கள். அவற்றை இணைத்து படத்தின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கலாம். ஒரு முதல்வர் சுவரேறி குதித்து நண்பர்களுடன் குத்தாட்டம் ஆட செல்வது, பலத்த பாதுகாப்பிற்கு இடையே ஒரு முதல்வர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் வீட்டில் இருந்து தப்பிப்பது என லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகம். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை ஒரு காட்சியில் இணைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இதுபோல் ஒருசில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் மொத்தத்தில் நோட்டா டெபாசிட் இழக்கின்றது.

2.25/5