ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:33 IST)

இருட்டு அறையில் முரட்டு குத்து: இரட்டை அர்த்த ரசிகர்களுக்கு விருந்து

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய முதல் படமான 'ஹரஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது தெரிந்ததே. அதனால் அதே பாணியில் இயக்குனர் சந்தோஷ் இயக்கியுள்ள இந்த படம் இளைஞர்களை கவருமா? என்பதை பார்ப்போம்
 
கௌதம் கார்த்திக், அவருடைய நண்பர் ஷா ராஜா, நாயகி வைபவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர். அங்கு ஒரு பங்களாவில் அவர்கள் தங்கியிருக்கும் நிலையில் அந்த பங்களாவில் பேய் ஒன்று உள்ளது. அந்த பேய் 25 வருடங்களுக்கு முன் செக்ஸ் உறவை அனுபவிக்காமல் அகால மரணம் அடைந்துவிட்டதால், செக்ஸ் உறவுக்காக ஏங்குகிறது.
 
இந்த நிலையில் கெளதமையும், அவருடைய நண்பரையும் பயமுறுத்தும் அந்த பேய், இருவரில் யாராவது ஒருவர் தன்னுடன் உறவு கொண்டால் இருவரையும் விட்டுவிடுவதாகவும், இருவரும் சம்மதிக்கவில்லை என்றால் அனைவரையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகின்றது இதனிடையே பேயை விரட்டும் சாமியார்களாக மொட்டை ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் பங்களாவிற்குள் நுழைந்து அவர்களும் பேயிடம் மாட்டி கொள்கின்றனர். அனைவரும் பேயிடம் இருந்து தப்பித்தார்களா? அல்லது பேயின் ஆசையை நிறைவேற்றினார்களா? என்பதுதான் மீதிக்கதை
 
கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஷா ராஜாவும் முதல் காட்சியில் இருந்தே தங்களுடைய இரட்டை அர்த்த வசனங்களை ஆரம்பித்துவிடுகின்றனர். வயாக்ரா மாத்திரை, டேபிளை தூக்கும் காட்சி என இரட்டை அர்த்த காட்சிகளும் படத்தில் ஏராளம். 
 
அதேபோல் நாயகிகள் வைபவி மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் உண்டு. படம் முழுக்க கிளாமர் உடையில் தோன்றி இளசுகளை கிறுகிறுக்க வைக்கின்றனர். பேயாக நடித்திருக்கும் நடிகையும் அவ்வப்போது கிளாமரில் தோன்றி விருந்தளிக்கின்றார். 
 
மேலும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோர்கள் தோன்றும் காட்சியிலும் இரட்டை அர்த்த வசனங்கள் உண்டு என்றாலும் ரசிக்கும்படி உள்ளது.
 
பாலுவின் ஒளிப்பதிவு மற்றும் பிரச்சன்னாவின் எடிட்டிங் ஓகே. பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை ஓகே
 
இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வந்த பழைய ஜோக்குகள் சிலவற்றை தவிர்த்திருக்கலாம்.
 
இந்த படத்தை தயவுசெய்து குடும்பத்துடன் யாரும் சென்று பார்க்க வேண்டாம்,.நண்பர்களுடன் ஜாலியாக இரண்டு மணி நேரம் ரசிக்க நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்
 
ரேட்டிங் 2.5/5