1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (18:19 IST)

இரும்புத்திரை திரை விமர்சனம்

ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் இளைஞர்களுக்கு இந்த உலகமே மறந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்கள் முதல் சாதாரண விஷயங்கள் வரை அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் நமக்கு உதவு செய்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனால் ஒரு தனிமனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே ஆபத்து என்பதை புரிய வைக்கும் படம் தான் இரும்புத்திரை
 
விஷால் ஒரு ராணுவ மேஜர். பொறுப்பில்லாமல் கடன் வாங்கி கேவலப்படுத்தும் அப்பாவால் தலைக்குனிவுக்கு ஆளாகும் விஷால் சமந்தாவின் அறிவுரையின்படி குடும்பத்தினர்களுடன் அன்புடன் இருக்க முயற்சிக்கின்றார். அப்போதுதான் தங்கை ஒரு வாலிபனை காதலித்ததும், அந்த காதல் மாப்பிள்ளை விட்டார் கேட்ட வரதட்சணையால் நின்றுவிட்டது என்பதும் தெரிய வருகிறது. இதனால் வேறு வழியின்றி தங்கையின் திருமணத்திற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சிக்கின்றார். ஆனால் வங்கி கடன் கொடுக்க செக்யூரிட்டி கேட்கிறது. இந்த நிலையில்  ஒரு ஏஜண்ட் மூலம் வங்கியில் பொய் சொல்லி ரூ. 6 லட்சம் கடன் வாங்குகிறார் விஷால். அதோடு தனது தாயின் நிலத்தை விற்ற ரூ.4 லட்சத்தையும் தங்கையின் திருமணத்திற்காக வங்கியில் போட்டு வைக்கின்றார். ஆனால் அந்த பணம் திடீரென காணாமல் போகிறது. இதுகுறித்து விசாரணையில் இறங்கும் விஷாலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. அவருடைய பணம் மட்டுமின்றி நூற்றுக்கணக்கானோர் பணம் ஆன்லைனில் கொள்ளை போவதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் விஷால் அதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
 
மேஜர் கேரக்டருக்கு அட்டகாசமாக பொருந்தும் பொருந்தும் விஷால், வில்லனை தேடி செல்லும் காட்சிகளில் தனது அபாரமான நடிப்பை தந்துள்ளார். அர்ஜூனுடன் மோதும் ஒவ்வொரு காட்சியிலும் விஷாலின் நடிப்பில் தீப்பொறி பறக்கின்றது. சமந்தாவுடனான காதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லை என்றாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.
 
மனநல மருத்துவராக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு ஓகே என்றாலும் படத்தின் மெயின் கதையுடன் இவருக்கு அதிக தொடர்பு இல்லை என்பது ஒரு மைனஸ்
 
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன், பல இடங்களில் விஷாலுக்கு சிம்மசொப்பனமாக நடித்துள்ளார். அவரது ஒவ்வொரு புத்திசாலித்தனமான நடவடிக்கைக்கும் தியேட்டரில் கைதட்டல் கிடைக்கின்றது
 
ரோபோசங்கர், டெல்லி கணேஷ், காளி வெங்கட், வின்செண்ட் அசோகன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
 
இயக்குனர் பி.எஸ்.மித்ரன், டிஜிட்டல் உலகில் உள்ள ஆபத்துகளை கண்முனே கொண்டு வந்துள்ளார். இதைவிட எளிமையாக புரிய வைக்க யாராலும் முடியாது. நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு டேட்டாவும் நமக்கு மட்டும் சொந்தமில்லை, நம்முடைய போன் நம்பர் சுமார் 30 லட்சம் பேர்களிடம் உள்ளது என்பது உள்பட பல திடுக்கிடும் தகவல்களை காட்சிகள் மூலம் விளக்கியுள்ளார்.
 
யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர். குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு அவர் போட்டுள்ள தீம் பட்டையை கிளப்புகிறது.
 
மொத்தத்தில் டிஜிட்டல் உலகின் மர்மங்களை வெளிக்கொண்டு வரும்  சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல விழிப்புணர்வு படமே இரும்புத்திரை
 
ரேட்டிங்: 3.5/5