வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (12:00 IST)

செக்க சிவந்த வானம்: திரைவிமர்சனம்

இளம் இயக்குனர்களின் கையில் தமிழ் திரையுலகம் சென்றுவிட்ட நிலையில் அப்டேட்டில் இருக்கும் ஒரே பழைய இயக்குனர் மணிரத்னம் மட்டுமே. இவரது ஓகே கண்மணி படத்தின் வெற்றியே இதற்கு சான்று. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மணிரத்னம் அவர்களின் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

அரசியல்வாதிகள், காவல்துறையினர் உள்பட அனைவரையும் ஆட்டி வைக்கும் தாதா பிரகாஷ்ராஜை கொல்ல சதி நடக்கின்றது. பிரகாஷ்ராஜின் தொழில் எதிரி தியாகராஜன் தான் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக அவருடைய மகன்கள் அரவிந்தசாமி, சிம்பு, அருண்விஜய் ஆகியோர் முடிவு செய்து தியாகராஜனை பழிவாங்க நினைக்க, பிரகாஷ்ராஜோ தன்னை கொலை செய்ய முயன்றது தியாகராஜன் இல்லை, தன்னுடைய மகன்களில் ஒருவர்தான் என்பதை கண்டுபிடித்து அதனை தனது மனைவி ஜெயசுதாவிடம் கூறுகிறார். இந்த நிலையில் திடீரென பிரகாஷ்ராஜ் நெஞ்சுவலியால் மரணம் அடைந்துவிட, அவருடைய இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டியில் மூன்று மகன்களுக்கு இடையே நடக்கும் போர்தான் இந்த படத்தின் கதை

அரவிந்தசாமி, சிம்பு, அருண்விஜய் ஆகிய மூவருக்கும் இடையிலான போட்டிதான் இந்த படத்தின் மெயின் கதை என்றாலும் சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரராக வரும் விஜய்சேதுபதிதான் இந்த படத்தின் உண்மையான ஹீரோ. அரவிந்தசாமியின் நெருங்கிய நண்பராகவும், அதே நேரத்தில் அவரை போட்டுத்தள்ள சிம்பு, அருண்விஜய்க்கு உதவி செய்தும், இறுதியில் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கும் கேரக்டரில் விஜய்சேதுபதி தூள் கிளப்பியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் சிம்புவிடம் விஜய்சேதுபதி கூறும் தன்னுடைய சிறுவயது பிளாஷ்பேக் படத்தின் ஹைலைட்

சிம்புவா இது என்று கூறும் அளவுக்கு அடக்கி வாசித்துள்ளார். இவ்வளவு அடக்கமாக இதுவரை சிம்புவை எந்த படத்திலும் பார்த்ததில்லை. அதே நேரத்தில் ஆக்சன் காட்சிகளிலும் தன்னுடைய காதலி கொல்லப்பட்டதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைவதிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சிம்பு

தந்தை பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க அரவிந்தசாமியுடன் மோதும் கேரக்டர் அருண்விஜய்க்கு. இவரது நடிப்பில் தெரியும் ஸ்டைலிஷ் இதுவரை எந்த படத்திலும் அவர் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்தசாமியின் கேரக்டரை இயக்குனர் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக செதுக்கியிருக்கலாம். இருப்பினும் ஒரு படத்தில் மல்டிஸ்டார்கள் நடித்தும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்

செண்டிமெண்ட் நடிப்புக்கு ஜோதிகா, கவர்ச்சிக்கு டயானா எரப்பா மற்றும் அதிதிராவ் ஹைதி, குடும்ப குத்துவிளக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு ஹீரோயின்களையும் சம அளவில் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்

பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான் ஆகியோர் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக பாடல்களுக்கு என தனியாக நேரம் ஒதுக்காமல் படத்தின் காட்சிகளுக்கு இடையே பாடலை புகுத்தியதிலும் இயக்குனர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை காண்பித்துள்ளார்

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் வேற லெவல். செர்பியா, துபாய் காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி

ஹாலிவுட் படமான 'காட்ஃபாதர்' படத்தின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை. விறுவிறுப்பான கேங்க்ஸ்டர் கதையை அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குவது என்பது ஒரு இயக்குனருக்கு மிகப்பெரிய சவால். அந்த சவாலை அசால்ட்டாக செய்துள்ளார் மணிரத்னம். வாழ்த்துக்கள்

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான ஆக்சன் கதையை ரசிக்க விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்

ரேட்டிங்: 4/5