1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (11:58 IST)

கள்ளப்பண மாஃபியாவை துரத்தி செல்லும் விஜய் சேதுபதி! – எப்படி இருக்கு ஃபார்சி?

Farzi
விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஃபார்சி வெப்சிரிஸ்.

இந்தியில் பேமிலிமேன் சீசன்கள் மூலம் பிரபலமான வெப்சிரிஸ் இயக்குனர்களாக அறியப்படுபவர்கள் ராஜ் மற்றும் டிகே. இவர்கள் இணைந்து உருவாக்கி தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள 8 எபிசோடுகள் கொண்ட வெப்சிரிஸ்தான் “ஃபார்சி (Farzi)”.

மும்பையில் வாழ்ந்து வரும் திறமைமிக்க ஓவியன் சன்னி (ஷாகித் கபூர்). சன்னியின் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவர் மும்பையில் ஒரு பத்திரிக்கை ப்ரெஸ் நடத்தி வருகிறார். அதில் சன்னியின் நண்பன் ஃபிரோஸ் (புவன் அரோரா) வேலை பார்த்து வருகிறான். அந்த பத்திரிக்கை அலுவலகம் கடனில் இயங்கி கொண்டிருக்கிறது. கடன்காரர்கள் கடனுக்கு பதிலாக ப்ரெஸ்ஸை ஜப்தி செய்ய உள்ளனர்.

தாத்தாவின் ஒரே சொத்தான ப்ரெஸ்ஸை காப்பாற்றுவதற்காக கள்ள ரூபாய் நோட்டுகளை சன்னியும், ஃபிரோஸும் அச்சடித்து சப்ளை செய்கிறார்கள். அதன்மூலம் ப்ரெஸ்ஸை காப்பாற்றுகிறார்கள்.

அதேசமயம் ஸ்பெஷல் டாஸ்க் ஆபிசரான மைக்கெல் வேதநாயகம் (விஜய் சேதுபதி) இந்தியாவில் கள்ள பணத்தை புழகத்தில் விடும் சர்வதேச மாஃபியா வில்லனான மன்சூர் தலால் (கே கே மேனன்)ஐ தேடிக் கொண்டிருக்கிறார். மன்சூர் தலாலின் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் சிப் ஒன்றை RBI ல் பணிபுரியும் மேகா (ராஷி கண்ணா) கண்டுபிடிக்கிறார்.

Shahid Kapoor


அதனால் மிஷினால் காட்டிக் கொடுக்க முடியாத கள்ள நோட்டை தயாரிக்க சன்னியின் உதவியை நாடுகிறார் மன்சூர் தலால். இதனால் சின்ன அளவில் குற்றங்கள் செய்து கொண்டிருந்த சன்னியும், ஃபிரோஸும் பெரிய மாஃபியா கூட்டத்திடம் சிக்குகிறார்கள். அந்த கூட்டத்துடன் இணைந்து அவர்கள் குற்றவாளிகள் ஆனார்களா? அல்லது திருந்தி அந்த கூட்டத்தை விஜய் சேதுபதிக்கு காட்டிக்கொடுக்க போகிறார்களா? என்ற அதிரடி திருப்பங்களுடன் அடுத்த சீசனுக்கான அஸ்திவாரத்துடன் முடிகிறது முதல் சீசன்.

ஒரு ரூபாய் நோட்டில் என்னென்ன துல்லியமான விஷயங்கள் உள்ளன. அது எப்படி அச்சடிக்கப்படுகிறது. கள்ளப்பணம் என்றால் என்ன? அது எப்படி இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்திய பொருளாதாரத்தை பாதிக்கிறது. என்னென்ன வகையில் கள்ள நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு படத்தில் அனைவருக்கும் புரியும் விதமாக கொண்டு வந்து காட்சி படுத்தியுள்ளதற்காகவே ராஜ் மற்றும் டிகேவுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.

Vijay Sethupathi


நடுத்தரவர்க்க ஓவியம் வரையும் இளைஞனாக ஷாகித் கபூர் சிறப்பாக நடித்துள்ளார். காமெடி வசனங்களிலும், காட்சிகளில் முக்கியத்துவத்திலும் ஷாகித்துக்கு இணையாக நடித்து தூள் கிளப்பியுள்ளார் புவன் அரோரா. ஒட்டு மொத்த தொடருக்கும் சுவாரஸ்யமான ஆளாக புவன் அரோரா இருக்கிறார். பொறுப்புமிக்க காவல் அதிகாரியாகவும், குடும்பத்திடமிருந்து பிரிந்த ஒற்றை ஆளாகவும் விஜய் சேதுபதி தனது நடிப்பில் மிளிர்ந்துள்ளார்.

பிரபலமான பேமிலி மேன் தொடரின் கதாப்பாத்திரமான செல்லம் சாரின் கேமியோ ரோல் எதிர்பாராத சர்ப்ரைஸ். மேலும் ஒரு காட்சியில் பேமிலிமேன் நாயகன் திவாரியுடன் மைக்கெல் பேசுவது போன்ற காட்சி வருகிறது. இதனால் ராஜ் மற்றும் டிகேவின் வெப் சிரிஸ் யுனிவர்ஸ் இதன் மூலமாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் முடிந்துள்ள முதல் பாகம் இரண்டாம் பாகத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K