1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (09:28 IST)

பொம்மை நாயகி சினிமா விமர்சனம் - ஹீரோவாக யோகி பாபு வெற்றி பெற உதவுமா?

சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா - மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் பொம்மை நாயகி படம் எப்படி இருக்கிறது?
 
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தியேட்டரில் வெளியாகியுள்ளது பொம்மை நாயகி திரைப்படம். இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும், குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார்.
 
படத்தின் கதை என்ன?
 
 
கடலூர் அருகேயுள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்.
 
இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக யோகி பாபு நாடிச் செல்கிறார். இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் வெளியீட்டுக்கு முன்பே திரைப் பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொம்மை நாயகி இருக்கிறதா என ஊடகங்களின் விமர்சனங்களை அறிந்து கொள்வோம்.
 
என்ன சொல்கின்றன ஊடகங்கள்
"பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து படம் விரிவாகப் பேசி இருக்கிறது. பா. இரஞ்சித் தயாரிப்பு என்றாலும் வழக்கமான அம்பேத்கர் புரட்சி வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல் இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
 
நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி வசனங்களை எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். யோகி பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தில் நிறைவாக இருக்கிறது," என்று தினமணி நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது.
 
சமூகத் தீண்டாமைக்கு எதிரான கேள்வி
 
 
"தன்னை எப்போதுமே ஒரு காமெடியன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருக்கிறார். படத்தில் அவர் எங்குமே சிரிக்கவில்லை."
 
"சமூகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கேள்வி எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது," என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
 
யோகி பாபு ஏமாற்றவில்லை
"சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்பாவி அப்பாவாக வரும் யோகி பாபுவின் நடிப்பு ஏமாற்றவில்லை. அவரது மனைவி கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
 
உணர்வுப்பூர்வமான கதையை படமாக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் மீது வர வேண்டிய அனுதாபம் ஏற்படாமல் போனது படத்தின் ஜீவனைக் குறைக்கிறது.
 
படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்க உதவி இருக்கிறது," என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
 
நீதிக்காக போராடும் அப்பா
அப்பாவியாக அதே நேரத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து போராடும் கதாபாத்திரத்தில் யோகி பாபு மிளிர்கிறார். ஆனால் அவரது நடிப்பைத் தவிர படத்தில் வரும் பெரும்பாலானோரின் நடிப்பு கதையுடன் ஒன்றவில்லை என்று தி நியூஸ் மினிட் விமர்சனம் எழுதியுள்ளது.
 
படத்தின் பேசப்படும் கதையும், அரசியலும் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் குழப்பத்துடன் நகர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
 
பாரத மாதா யார்?
"ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடத்தப்படும் போராட்டத்தை பொம்மை நாயகி காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளது.
 
நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே எப்படி மதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். படத்தில் வரும் சீன்கள் தனித்தனியாக நன்றாக இருக்கிறது.
 
ஆனால் திரைக்கதையாகப் பார்க்கும் போது கதையை வேகமாகச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு தெரிகிறது," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது.
 
படத்தின் இறுதியில் ‘பாரத மாதா யார்’ என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என தி இந்து எழுதியுள்ளது.