1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 28 மே 2016 (15:16 IST)

மறக்க முடியுமா - High Plains Drifter

மறக்க முடியுமா - High Plains Drifter

சென்ற வருடம் வெளியான விக்ரமின், 10 எண்றதுக்குள்ள படத்தில் அவருக்கு பெயர் கிடையாது.


 


படத்தின் நாயகனுக்கு பெயரில்லாமலிருப்பது அரிது. 52 வருடங்களுக்கு முன்பு 1964 -இல் வெளியான, ஏ பிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் படத்தின் நாயகனுக்கும் பெயர் கிடையாது. படத்தை இயக்கியவர் செர்ஜியோ லியோன், நடித்தவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். இவர்களுடன் இசையமைப்பாளர் என்னியோ மாரிகோனி இணைந்து உருவாக்கிய படங்கள் காலத்தால் அழியாத வெஸ்டர்ன் திரைப்படங்களாக நிலைபெற்றுள்ளன.
 
1965 -இல் இந்த மூவர் கூட்டணி, ஃபார் ஏ ப்யூ டாலர்ஸ் மோர் என்ற படத்தை உருவாக்கியது. இதிலும் நாயகனுக்கு பெயர் கிடையாது. அடுத்த வருடம் மீண்டும் ஒரு படம். தி குட் தி பேட் அண்ட் தி அக்ளி. இதிலும் பெயர் இல்லாத நாயகன். இந்த மூன்று படங்களும் டாலர்ஸ் ட்ரையாலஜி என்று அழைக்கப்படுகின்றன. வெஸ்டர்ன் கௌபாய் படங்களின் சிகரத்தில் இந்தப் படங்கள் அமைந்திருக்கின்றன.
 
வெஸ்டர்ன் படங்களின் நாயகனாக நிலைபெற்ற பிறகு கிளின்ட் ஈஸ்ட்வுட் படம் இயக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய இரண்டாவது படம், ஹை பிளைன்ஸ் ட்ரிப்டர். 1973 -இல் வெளியான இந்தப் படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நாயகனாக நடித்திருந்தார். இதிலும் நாயகனுக்கு பெயர் கிடையாது.
 
பாலைவனத்தில் அமைந்திருக்கும் சின்ன நகரமான லாகோவுக்கு குதிரையில் கிளின்ட் ஈஸ்ட்வுட் வருகை தருகிறார். நகரம் என்று அழைத்தாலும், லாகோ சில வீடுகளும், பாரும், ஒரு பார்பர் ஷாப்பும், ஷெரீஃப் அலுவலகமும், ஒரு ஹோட்டலும், சில கடைகளும் மட்டுமே கொண்ட சின்ன குடியிருப்பு. அவர் பார்பர் ஷாப்பில் இருக்கையில் மூன்று கேடிகள் அவரிடம் வம்பிழுக்கிறார்கள். ஏற்கனவே முடிவெடுத்து வந்தவர் போல் மூவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் சுட்டுக் கொல்கிறார். அந்த சின்ன நகரம் நடுங்கிப் போகிறது. அதன் பிறகு அவர் நடத்தும் தர்பாரில் அந்த சின்ன நகரம் விழி பிதுங்கிப் போகிறது.
 
கிளின்ட் ஈஸ்ட்வுட் யார், எதற்காக அங்கு வந்தார், அவரது பெயர் என்ன, தொழில் என்ன. லாகோ நகரத்து ஜனங்களைப் போலவே நமக்கும் எதுவும் சொல்லப்படுவதில்லை. ஹோட்டலில் உறங்குகையில் லாகோ நகரத்தின் முன்னாள் பெடரல் மார்ஷல் ஜிம் டங்கன் மூன்று பேரால் சாட்டையால் அடித்துக் கொல்லப்படும் காட்சியை கிளின்ட் ஈஸ்ட்வுட் கனவு காண்கிறார். அது மட்டுமே, அவர் யார் என்பதற்கு நமக்கு தரப்படும் துருப்புச் சீட்டு.
 
லாகோ நகரத்தின் ஒரே வருவாய் சுரங்கத் தொழில். அதில் சில பிரச்சனைகள். நகரத்தின் பெரிய புள்ளிகள் சிலருக்கு அதில் தொடர்புண்டு. அவர்கள் அதனை சமாளிக்க ஸ்டேசி ப்ரிட்ஜஸ் என்ற தாதாவின் உதவியை நாடுகின்றனர். அவனும் அவனது இரு கூட்டாளிகளும்தான் ஜிம் டங்கனை அடித்துக் கொன்றது. காரியம் முடிந்ததும் அந்த பெரிய மனிதர்களே காட்டிக் கொடுக்க, மூன்று குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் தண்டனை முடிந்து எந்நேரமும் வரக்கூடும் என்ற பய சூழலில்தான் கிளின்ட் ஈஸ்ட்வுட் லாகோ நகரத்துக்கு வருகை தந்து, சிறையில் இருக்கும் தாதாக்களின் மூன்று சிங்கிடிகளை சுட்டுக் கொல்கிறார். இப்படியொரு சூழலில் அந்த நகரத்து மக்களின் எண்ணம் எப்படியானதாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. 
 
நகரத்தின் ஷெரீஃப் லாகோ நகத்தையும், அதிலுள்ளவர்களையும் காப்பாற்ற கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் உதவியை கோருகிறார். அவர் மறுக்கிறார். கடைசியில், கிளின்ட் ஈஸ்ட்வுட் எது செய்தாலும், எதை சொன்னாலும் செய்வது என்ற உச்சபட்ச அதிகாரத்தை வழங்கி அவரை சம்மதிக்க வைக்கிறார்கள். அதன் விளைவுகள் கடமையாக இருக்கின்றன. 
 
ஹோட்டலில் தங்கியிருக்கும் அனைவரையும் ஈஸ்ட்வுட் காலி செய்யச் சொல்கிறார். பாரில் அனைவருக்கும் இலவச மது விநியோகிக்க ஆணையிடுகிறார். பார்பர் ஷாப்பின் உதவியாளனான குள்ளனை ஷெரீஃப்பாக பிரகடனம் செய்கிறார். வயதான செவ்விந்தியருக்கு இலவசமாக போர்வைகள் தரச் செய்கிறார், குழந்தைகளுக்கு மிட்டாய்கள். இவற்றையெல்லாம் மூன்று தாதாக்களின் மீதுள்ள பயத்தில் லாகோ நகரம் பொறுத்துக் கொள்கிறது.
 
கடைசியில் நகரத்தின் அனைத்து கட்டிடங்களிலும் ரத்தநிற பெயின்ட் அடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சர்ச்சும் அதிலிருந்து தப்பவில்லை. வெல்கம் டூ லாகோ என்பது வெல்கம் டூ ஹெல் என மாற்றப்படுகிறது. ஈஸ்ட்வுட் அங்குள்ளவர்களுக்கு மூன்று தாதாக்களையும் சமாளிக்க துப்பாக்கி பயிற்சி தருகிறார். ஆனால், அதற்கு லாயக்கற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
 
கடைசி யுத்தத்தில் தங்களை ஏமாற்றிய பெரிய புள்ளிகளை தாதாக்கள் கொலை செய்கிறார்கள். ஈஸ்ட்வுட் மூன்று பேரையும் அழிக்கிறார். ஜிம் டங்கனுக்கு நகரத்துக்கு வெளியே சிறப்பான ஒரு கல்லறை அமைக்கப்பட, ஈஸ்ட்வுட் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார்.
 
படத்தில் எங்கும் ஈஸ்ட்வுட்டின் பெயர் குறிக்கப்படவில்லை. ஜிம் டங்கன் கொலை செய்யப்படுவதை கனவு காண்பதிலிருந்தும், அவருக்கு கல்லறை அமைப்பதிலிருந்தும் ஜிம்மின் சகோதரனாகவோ வேண்டப்பட்ட யாராகவோ ஈஸ்ட்வுட் இருக்கலாம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஜிம் கொல்லப்படும் போது நகரமே அதனை தடுக்க முயற்சிக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. ஈஸ்ட்வுட் அந்த கிராமத்தவர்கள் மீது காட்டிய குரோதமும், ரத்தநிற பெயின்ட் அடித்து அதனை நரகமாக மாற்றியதும் அதற்கான பழிவாங்கலாக கொள்ளலாம்.
 
43 வருடங்களுக்குப் பிறகும் சுவாரஸியத்தின் அளவு குறையாமல் ஈர்க்கும் சில படங்களில் இதனையும் சொல்லலாம்.