ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:39 IST)

பதற்றமான வாக்கு சாவடிகள் எவை..! லிஸ்ட் வெளியிட்ட தேர்தல் அதிகாரி.!!

Sathya Pradha Saghu
தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமான என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் (Critical polling station ) என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாகளிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை வாங்கும் பணி தொடங்கி உள்ளது என்று தெரிவித்தார்.
 
அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு வாங்க முதல் முறை வீடுகளுக்கு செல்லும் போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால்,  இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள் என்றும் இரண்டு முறை மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

சுவிதா செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு  அனுமதியை பெறலாம் என்றார். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை  எடுப்பார்கள் என்றும் இதுதவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றபடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் பூத் சீலிப் வழங்கப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பூத் சீலிப் வழங்கப்படாது என்றும் இதுவரை 13.08 லட்சம் பூத் சீலிப்  வழங்கப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமான என்றும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் (Critical polling station ) என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 
Road show நடத்த தேர்தல்  நடத்தும் அதிகாரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு குறிப்பிட்டுள்ளார்.