திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (16:14 IST)

தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணி இருக்காது.! ராகுல் காந்தி தோல்வி அடைவார்..! பிரதமர் மோடி..!!

PM Modi
மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டில்  காங்கிரஸின் இளவரசர் தோல்வியைத் தழுவுவார் என்றும் அதற்கு பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தை அவர் தேட வேண்டும் என்றும்  ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடா மற்றும் ஹிங்கோலி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நந்தேடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். 
 
அப்போது பேசிய அவர், நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும், குறிப்பாக முதல்முறையாக வாக்களித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

நேற்றைய வாக்குப்பதிவில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக அதிக வாக்குகள் விழுந்ததாக தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்ததைப் போல காங்கிரஸ் இளவரசர் இந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் தோல்வியடைவார் என்றும் ஏப்ரல் 26-க்கு பின்னர் அவர்  வேறு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடவேண்டும் என்றும் ராகுல் காந்தி குறித்து பிரதமர் விமர்சித்தார்.
 
மக்களவைத் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாததால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு போட்டியிட்டுள்ளார்  என்று அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர் என்றும் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியே இருக்காது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 
எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் தங்களின் ஊழல்களை மறைப்பதற்காகவே சுயநலத்தோடு ஒன்றிணைந்துள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் கட்டாயம் தோல்வி அடைவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.