இயந்திரத்தில் கோளாறு.? தர்ணா போராட்டம்..! நா.த.க வேட்பாளர் கைது..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள கேந்திர வித்யாலாயா பள்ளியில் 5 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்குள்ள 165-வது பூத்தில், பொதுமக்கள் நாம் தமிழர் கட்சியான மைக் சின்னத்துக்கு வாக்களித்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயனுக்கு கட்சியினர் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கார்த்திகேயன், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பு அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இதனால், வாக்குப்பதிவு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் நேரமாவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காவல் துறையினர் கார்த்திகேயனை வாக்குச்சாவடியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
அப்போது, கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்திக்க முயன்றார். ஆனால், காவல் துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால், கார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து காவல் துறையினர் நாம் தமிழர்க கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயனை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.