1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:48 IST)

மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக..! இந்து மதத்திற்கு எதிரானது இந்தியா கூட்டணி..! பிரதமர் மோடி..

Modi
நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
 
சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் மேற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுக் கூட்ட மேடையில் உரையாற்றிய பிரதமர்,  ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது என கண் கலங்கினார். 
 
பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  இந்து தவிர வேறு மதங்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை என்றும் இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
 
இந்து தர்மத்தை அழிப்பது மட்டுமே இந்தியா கூட்டணி நோக்கமாக உள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, சக்தியை அழிக்க நினைப்பவர்களை அந்த சக்தியே அழித்துவிடும் என்றார்.  ஏப்ரல் 19ஆம் தேதி உங்கள் வாக்குகளின் மூலம் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவை தாருங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தை புண்ணியம் பூமியாக மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
 
பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலைகளை உருவாக்கியுள்ளது பாஜக என்றும் சுயசார்பு இந்தியாவை அடைவதில் பாஜக முனைப்போடு இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.   நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 
 
தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம் என்றும் தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என குறிப்பிட்ட அவர், வலிமையான பாரதத்தை உருவாக்கும் சபதத்துடன் தலைவர்கள் நம்முடன் இணைந்துள்ளனர் என்றும் கூறினார்.  தமிழகம்  புதிய உச்சத்திற்கு செல்லும் என்றும் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.