ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (12:08 IST)

பிரதமர் மோடி வருகை எதிரொலி.! சென்னை - சேலம் விமான சேவை ரத்து..!!

Modi
சேலத்தில் நடைபெற உள்ள பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை சேலம் இடையேயான பயணிகள் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம்தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக பாஜக பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த வகையில், சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது
 
இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டரில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு வருகிறார்.

அப்போது அங்கு மக்களை சந்தித்த பின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக  ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோதனை முறையில் ஹெலிகாப்டர் வந்து இறங்கி சென்றது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும், மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட பகுதி, அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று டெல்லிக்கு திரும்புவதால் விமான நிலைய பகுதி ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
பிரதமர் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் இன்று  ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை சேலம் இடையேயான பயணிகள் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.