தேர்தலில் அன்புமணி போட்டியில்லை.. மீண்டும் மாநிலங்களவை எம்பி ஆகிறாரா..?
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் அன்புமணி ராமதாஸின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 2019 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி தோல்வியடைந்தார்.
தொடர்ந்து மாநிலங்களவை எம்பியாக உள்ள அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், மீண்டும் அவர் மாநிலங்களை எம்பியாகவே தொடருவார் என தெரிகிறது.