வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (20:12 IST)

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

Voters TN
முதற்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
 
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. 
 
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, பிற்பகலுக்குப் பின் அதிகமானோர் ஜனநாயக கடமையாற்ற தீவிரம் காட்டியதால்  வேகமெடுத்தது.
 
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. ஆனால், ஒருசில இடங்களில் 6 மணிவாக்கில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் வழிவகை செய்தனர்.

இதனால், தாமதமாக வந்த போதும் உரிய நேரத்துக்கு முன் வாக்குச்சாவடிக்குள் வந்ததால் அவர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.


அதிகபட்சமாக கள்ளக்குறிசி தொகுதியில் 75.67 சதவீதம் பதிவானதாக தெரிவித்தார். கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 10 % வாக்குகள் பதிவானதாக சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.