‘ஹார்ட் பீட்’ யோகலட்சுமி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‘தி கோர்ட்’.. இன்று முதல் ஸ்ட்ரீமிங்!
ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை யோகலட்சுமி தற்போது புதிய வெப்சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தி கோர்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத் தொடர் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட் தொடரின் முதல் இரண்டு சீசன்களில் தேஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்த யோகலட்சுமி, தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் துணிச்சலான அணுகுமுறையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்த யோகலட்சுமி, தற்போது சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தி கோர்ட் வெப்சீரிஸில் யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி, அர்ஜுன் ஷியாம், விவேக் பிரசன்னா, விஜே கல்யாணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திக்குவாய் குறைபாடு கொண்ட ஒரு திறமையான பெண், தனக்கு வேண்டிய நீதியைப் பெற எதிர்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. குறிப்பாக, சொந்த தந்தைக்கு எதிராகவே நீதிமன்றத்தில் மகள் வாதாட வேண்டிய சூழல் உருவாகிறது. தந்தை–மகள் இடையே நீதிமன்றத்தில் நடைபெறும் வாதங்களும், அதன் பின்னணியில் இருக்கும் உணர்வுகளும்தான் தொடரின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளன.
தி கோர்ட் வெப்சீரிஸின் புதிய எபிசோடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என்றும், ஒரே நாளில் 4 எபிசோடுகள் வீதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
