வெப்சீரிஸ் பார்த்து மனைவியை கொன்ற கணவன்.. மூன்றே நாளில் கைது..!
கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக மனைவியை வெப்சீரிஸ் பார்த்து கொன்ற 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கமல் சிங் மற்றும் கோமல் சிங் தம்பதியினருக்கு இடையே சொத்து விவகாரம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு ஆண்டாக மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 30 அன்று வீட்டில் தனியாக இருந்த கோமலை, 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப்தொடரை பார்த்துத் திட்டமிட்டு கமல் சிங் வாளால் தாக்கியுள்ளார்.
அவர் அலறியடித்து சமையலறையில் ஒளிய முயன்றபோது, அவரை இழுத்து சென்று கத்தரிக்கோலால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்கு பின் இரத்த கரைகளுடன் இருந்த ஆடைகள் மற்றும் வாளை ஒரு பையில் வைத்து கொண்டு தப்பிவிட்டார். மேலும், வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு காவல்துறையை திசைதிருப்ப நேபாளம் மற்றும் மதுரா நோக்கி தப்பியோடியுள்ளார்.
மூன்று நாட்களாக தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர், மதுரா ரயில் நிலையம் அருகே அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த பணம் மற்றும் ஸ்கூட்டரை கைப்பற்றினர். விசாரணையில், வெப் சீரிஸ் பாணியில் தடயங்களை அழிக்க முயன்றதாக குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து தகராறில் மனைவியைக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
