புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (14:06 IST)

இனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்! ட்ராய் திடீர் முடிவு!

செல்போனிலிருந்து எந்தவொரு நெட்வொர்க்கிற்கு பேசினாலும் பணம் வசூலிக்கும் புதிய விதியை ட்ராய் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2ஜி தொழில்நுட்ப காலத்தில் போனிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கு அழைக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. அதன் பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி, நிறுவனங்களுக்கிடையேயான தொழில் போட்டி ஆகியவற்றால் அனைத்து செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களும் எந்த நெட்வொர்க்கிற்கு பேசினாலும் கட்டணமில்லை என்று தங்கள் சேவை திட்டத்தை மாற்றியமைத்தன.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கில் இருந்து மற்றவற்றை தொடர்பு கொள்ள நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஜியோ அந்த வசூலிக்கப்படும் தொகைக்கு நிகரான டேட்டா வழங்கப்படும் என அறிவித்து சமாதானம் செய்தது.

இந்நிலையில் ட்ராய் அமைப்பு 2ஜி காலத்தில் இருந்தது போலவே மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை மீண்டும் தொடங்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜனவரி 2020 முதல் இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு ஜியோ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு பின்தங்கி விடும் எனவும் கூறியுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு மற்ற நெட்வொர்க்குகள் இன்னும் பதில் எதுவும் சொல்லவில்லை.