எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம்… ஆதரவுக்கரம் நீட்டும் வாரியம்!
இந்தியாவில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதி போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அந்த போட்டிகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.