1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:17 IST)

வயசானாலும் அதே ஸ்டைல், அதே ஃபினிஷ்... கண்முன் வந்து போன 28 வயது Young MSD!!

மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டினார் தோனி.

 
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
 
மும்பை vs சென்னை: 
நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. இரண்டாவதாக களம் இறங்கிய சிஎஸ்கே அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது அதிர்ச்சியை அளித்தது.
 
உத்தப்பா மற்றும் ராயுடு ஓரளவு சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தாலும் 15 ஓவர்களுக்குள் அவர்களும் அவுட் ஆனார்கள். அணி கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஜடேஜா 8 பந்துகளில் 3 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார்.
தோனியின் ருத்ரதாண்டவம்: 
கடைசியாக தோனியும், ப்ரெட்டோரியஸும் வெற்றிக்காக முயற்சித்து வந்த நிலையில் சில பவுண்டரிகள் அடித்த ப்ரெட்டோரியஸும் விக்கெட்டை இழந்தார். கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டினார் தோனி.
 
முதலில் ஒரு சிக்ஸர், அடுத்து இரண்டு பவுண்டரிகள், இடையே சில ரன்கள் என 17 ரன்களை ஒரே ஓவரில் குவித்து சிஎஸ்கேயை த்ரில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வரும் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி குறித்த ஹேஷ்டேகுகள், மற்றும் ஸ்பெஷல் வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நினைவுக்கு வரும் 2010 தர்மசாலா போட்டி: 
கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை அணியின் கடைசி லீக் போட்டி அது. பஞ்சாபிற்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். பஞ்சாப் முதலில் பேட் செய்து 190+ ஸ்கோரை எடுத்தது. நேற்றைய போட்டியை போல கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. 
 
அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த தோனி ஓவரில் முதல் நான்கு பந்துகளிலேயே 16 ரன்களை எடுத்து சென்னை அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தோனிக்கு 28 வயது. ஆனால் இப்போது 40 வயதாகியும் அதே ஜோஷூடன் கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்து மும்பைக்கு எதிராக அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.