வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. கார்கில் போர் சாதனைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (13:44 IST)

எதிரிகளை சுக்குநூறாக்கிய மனோஜ் பாண்டே! – கார்கில் போர் நினைவுகள்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது கார்கில் போர். நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டிய போர் இந்திய ராணுவ வீரர்களின் தீரமான செயல்களால் இரண்டே மாதத்தில் முடிவடைந்தது. அப்படியான தீரமான வீரர்களில் முக்கியமானவர் மனோஜ்குமார் பாண்டே.

உத்தரபிரதேசத்தில் உள்ள ருதா என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர் மனோஜ் பாண்டே. சிறுவயது முதலே குஸ்தி, மல்யுத்தம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட மனோஜ் பாண்டே என்சிசியில் சேர்ந்தபோதுதான் ராணுவம் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பியில் சேர அவர் விண்ணப்பித்தபோது “நீங்கள் ஏன் ராணுவத்தில் சேர விரும்புகிறீர்கள்?” என அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு அவர் சொன்ன பதில் ஒன்றுதான் “நான் பரம்வீர் சக்ரா விருது பெற விரும்புகிறேன்”. தேசிய பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் கடும் பயிற்சிகள் மேற்கொண்ட மனோஜ் 1997ல் 11 கூர்க்கா படை முதல் பட்டாலியனில் சேர்ந்தார். கார்கில் போர் தொடங்கும் முன்னதாக மனோஜ் பாண்டேவின் படை சியாச்சென் மலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள எல்லைப்பகுதி என்றால் அது இந்தியாவின் சியாச்சென் மலைப்பகுதிதான்.

சியாச்சென் பாதுகாப்பு பணிகள் முடிந்து புனே திரும்பிய கூர்க்கா படை கார்கில் போர் தொடங்கியதால் மீண்டும் கார்கில் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கார்கிலின் காலுபார் பகுதியை ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தோடு மனோஜ் பாண்டேவின் படை மோத வேண்டிய சூழல் எழுந்தது.

கலோனல் லலித் ராய் தலைமையில் புறப்பட்ட அந்த குழுவை பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கர் அமைத்து தாக்க தொடங்கினர். இதனால் பல இந்திய வீரர்கள் தாக்கப்பட்டனர். மனம் தளராத இந்திய வீரர்கள் தொடர்ந்து தாக்கியபடியே முன்னேறினர். பாகிஸ்தானின் முதல் நிலை படைகளில் இருவரையும், இரண்டாம் நிலை தாக்குதல் படையில் இருவரையும் மனோஜ் பாண்டே வீழ்த்தினார். அதேசமயம் எதிரிகளால் கை, கால்களிலும் குண்டடி பட்டார். எனினும் தொடர்ந்து முன்னேறி எதிரிப்படைகளின் நான்கு நிலைகளையும் வீழ்த்தினர். அப்போது எதிரிகள் வீசிய குண்டில் மனோஜ் பாண்டே பலியானார்.

யுத்த களத்தில் போரிடுவதற்கு முன்பாக அவரது டைரி குறிப்பில் “எனது வீரத்தை பறைசாற்றும் முன் என்னை மரணம் ஆட்கொண்டால், அந்த மரணத்தையும் நான் கொல்வேன்”என்று எழுதியுள்ளார். அவரது வீரத்தை பறைச்சாற்றும் விதமாக அவருக்கு இந்திய அரசு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதை வழங்கி கௌரவித்தது. மனோஜ் பாண்டே தனது விருப்பப்படியே உயிரை தியாகம் செய்து பரம்வீர் சக்ரா பெற்றார்.