விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் உடையும்: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தொண்டர்களின் இந்த எண்ண ஓட்டத்திற்கு மாறாக, காங்கிரஸ் தலைமை மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், தமிழக காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பிளவு ஏற்பட்டால், ஒரு பிரிவு நிர்வாகிகள் விஜய்யின் கட்சியுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக தெரிகிறது. இது 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாற்றத்தை நினைவூட்டுகிறது.
அன்று அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஜி.கே. மூப்பனார் கட்சியை உடைத்து 'தமிழ் மாநில காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். முப்பதாண்டுகளுக்கு பிறகு அதே போன்றதொரு சூழல் தற்போது உருவாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமை தொண்டர்களின் விருப்பத்தை ஏற்குமா அல்லது பழைய வரலாறு மீண்டும் திரும்புமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.
Edited by Siva