திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:02 IST)

வாமன ஏகாதசியின் சிறப்புக்கள் என்ன தெரியுமா...?

Vamana Ekadasi
ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது. அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.


தசாவதாரத்தில் தனிச்சிறப்பு மிக்க அவதாரம் வாமன அவதாரம். முழு மனித வடிவில் பகவான் எடுத்த முதல் அவதாரம் இது. குள்ள உருவில் பிரம்மச்சாரியாகத் தோன்றி, தோன்றிய நாளிலேயே வேதங்கள் அனைத்தும் பயின்று மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார் என்கிறது புராணம். மேலும் இந்த அவதாரத்தில் அவர் மகாபலியை சம்ஹாரம் செய்யவில்லை. மாறாக பாதாள லோகத்துக்கே அனுப்பினார் என்பது சிறப்பு.

பாதாள லோகத்தில் வாழும் காலம் முழுமையும் மகாபலியோடு விக்ர ரூபமாக எழுந்தருளியிருப்பதாகவும் வாக்குத் தந்த வண்ணமே இருந்தார் என்பதும் இந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு. அவ்வாறு மகாபலி பகவானின் திருவுருவைப் பாதாள லோகத்தில் பிரதிஷ்டை செய்த நாள்.

திருவடியின் மகிமையைச் சொல்வது இந்த அவதாரம். பகவான் ஓங்கி உலகளந்தபோது அவரின் இடுப்பு ஸ்வர்க்க லோகத்திலும் வயிறு மஹர்லோகத்திலும் மார்பு ஜனலோகத்திலும் கழுத்து தபோலோகத்திலும் தலை சத்ய லோகத்திலும் இருந்தன என்கிறது புராணம். அத்தகைய மாபெரும் உருவெடுத்த அந்தப் பெருமாளின் திருவடிவே உலகளந்த பெருமாளாக ஆலயங்கள் தோறும் வணங்கப்படுகின்றன.

ஆலயங்களில் நாம் தரிசிக்கும் பெருமாள் திருமேனியின் சிறிய திருவடிதான் அந்நாளில் மூவுலகங்களையும் அளந்தது என்று அறிந்து தெளிந்து பணிவதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை அடையலாம் என்பதை அறிந்துதான் ஆழ்வார்கள் அந்தத் திருவடியைப் போற்றிப் பாடினார்கள்.