1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:29 IST)

ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி !!

Parsva Ekadashi
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.


'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'பரிவர்த்தினி ஏகாதசி' என்றும் 'வாமன ஏகாதசி' என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது.

பொதுவாகவே ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது. அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.