மகாசிவராத்திரி தோன்ற காரணமான பிரம்மன், விஷ்ணு..! – மகாசிவராத்திரி வரலாறு!
மாசி மாதம் சதுர்த்தசியில் வரும் மகாசிவராத்திரியானது சிவபெருமானின் பூரண அருளை வழங்கும் சிறப்பு மிக்க நாளாகும். மகாசிவராத்திரி தோன்றியதன் பின்னால் பெரும் புராணக்கதையே உள்ளது.
ஒருசமயம் படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கும், காக்கும் கடவும் விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்பதில் போட்டி எழுந்தது. இருவரும் பரமேஸ்வரரிடம் சென்று முறையிட, அவர்களை சோதிக்கும் பொருட்டு ஈஸ்வர பெருமான் மகா அவதாரம் எடுத்து மேலே வானும், கீழே பூமியும் ஆழப் பதியுமாறு தோன்றினார். இருவரில் யார் முதலில் ஈஸ்வர மூர்த்தியின் அடியையோ, தலையையோ காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்றானது.
பாற்கடலில் பள்ளிக் கொண்ட விஷ்ணு பெருமாள் வராகமாக (பன்றி) அவதாரமெடுத்து பூமியைக் குடைந்து பரமேஸ்வரரின் அடியை காணப் புறப்பட்டார். பிரம்மர் அன்ன வாகனம் மீதேறி பரமேஸ்வரரின் தலை உச்சிக் காண மேல்நோக்கி பயணித்தார். அப்போது ஈஸ்வர பெருமானின் தலை உச்சியிலிருந்து விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூ ஒன்றை கண்ட பிரம்ம தேவர், அதனிடம் தான் ஈஸ்வர பெருமானின் தலை உச்சியைக் கண்டதாகவும், அங்கிருந்து தாழம்பூ தன்னை கொண்டு வந்ததாகவும் போய்யுரைக்குமாறு வேண்டினார்.
தாழம்பூவும் பிரம்மரின் வேண்டுதலை ஏற்று பரமேஸ்வரரிடம் பொய்யுரைக்க சினம் கொண்ட ஈஸ்வர மூர்த்தி இனி பூலோகத்தில் பிரம்மருக்கு கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூ சர்ப்பங்கள் தீண்டும் மலராகவும், வழிபடுதலுக்கு உதவாததாகவும் ஆகக் கடவது என்றும் சாபமிட்டார்.
படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணு பெருமாளையும் சோதிக்க பரமேஸ்வரர் மகா அவதாரம் எடுத்த மாசி மாதம் சதுர்த்தசி நாளே ஆண்டுதோறும் மகாசிவராத்திரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே சதுர்த்தசி நாளில்தான் தேவர்கள் அமிர்தம் கடையும்போது வாசுகி நாகம் வெளியிட்ட ஆலக்கால விஷத்தை சிவபெருமான் விழுங்கி நீலகண்டராக தேவர்களை காத்தார் என்பதாலும் மகாசிவராத்திரி பல சிறப்புகளை பெறுகிறது.
இந்த மகாசிவராத்திரி நாளிலே சிவபெருமானை உள்ளூர தியானித்து இரவு விழித்திருந்து விரதம் மேற்கொண்டால் தேவர்களுக்கு வழங்கியதற்கு ஈடான அருளை வழங்குவார் என்பது ஐதீகம்.
Edit by Prasanth.K