வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (20:48 IST)

ஆண்டியை அரசனாக்கும் ஆடி மாதம்: வழிபட வேண்டிய முக்கிய நாட்கள்

ஆடி மாதம் என்பது இந்து மத தெய்வங்களை வழிபட முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகமான இம்மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் சரியான முறையில் வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் வீட்டில் நிலையாக பெருகி வளம் தரும்.

ஆடி மாதத்தில் தவறவிடக் கூடாத சில முக்கியமான நாட்களையும் முக்கிய வழிபாடுகளையும் பக்தர்கள் பலன் பெறும் பொருட்டு இங்கே பதிவிட்டிருக்கிறோம்.

ஆடி வெள்ளி: ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாகும். பார்வதி தேவியின் அவதாரமான 108 அம்மன்களுக்கும் இந்த நாள் சிறப்பு தரும் நாள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வேண்டினால் பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வெள்ளியும் அம்மனுக்கு மஞ்சள் காப்பு நடைபெறும்.

ஆடி கிருத்திகை: ஆடி மாதத்தின் கிருத்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முருக பெருமானை வேண்டி வந்தால் நினைத்தது நடக்கும். கிருத்திகையின் போது முருகன் கோவிலுக்கு சென்று வேண்டி வருவது சிறந்த பலனை தரும்.

ஆடி அமாவாசை: ஆடியில் வரும் ஒரே அமாவாசை நாள். இது இறந்த முன்னோர்களுக்கு உகந்த நாள். முன்னோர்களை இந்த அமாவாசை நாளில் வழிப்படுவதன் மூலம் அவர்கள் மோச்சமடைவர். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற முடியும்.

ஆடி பூரம்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு உகந்த நாள். இந்நாளில் பெருமாள் கோவில்களில் கன்னி பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில் வரன் கைக்கூடும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தில் ஆண்டாள் பாசுர நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறும்.

ஆடி பெருக்கு: ஆடி மாதம் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் நுரை பொங்க ஓடும் நாள். இந்நாளில் நீர்நிலைகளில் விளக்கேற்றி மக்கள் வழிப்படுவர். இதன்மூலம் வீட்டில் இன்பமும், செல்வமும் ஆண்டுதோறும் நிறைந்திருக்கும் என்பது மரபு.

ஸ்ரீ வரலட்சுமி விரதம்: பிரம்மரின் துணைவியும், அஷ்ட லட்சுமிகளின் மூலமுமான மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாள் இது. இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல் ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
ஜூலை 17ம் தேதி ஆடி முதல் நாள் தொடங்குகிறது. வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும், தெய்வீக மனம் கமழும் மாதமாம் ஆடி மாதத்தில் பக்தர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டும்.