சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் அற்புத மூலிகை எது தெரியுமா...?
சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
கற்றாழை சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.