வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

குடல் வால் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...!

குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதியே ஆகும், இதில் ஏற்படும் அழற்சியே குடல் வால் அழற்சியாகும். 
குடலில் இருக்கும் கிருமிகளால் இந்த குடல் வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக, அதில் அழற்சி ஏற்படுகிறது. அப்போது அது வீக்கமடைந்து சீழும் உருவாகிறது. குடல் வால்  அழற்சி பாதிப்பு உள்ளவர்களுக்கு அடி வயிற்றில் வலி ஏற்படும், இதுவே அதன் முக்கியமான அறிகுறி. சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படவில்லை எனில் குடல்வால்  வெடித்துவிட வாய்ப்புகள் உள்ளது. இது வயிற்றின் உள்ளுறையில் அழற்சி அல்லது சீழ் ஏற்பட வழிவகுக்கலாம்.
 
ஆரம்ப கட்டத்தில் இந்நோயில் அடிவயிற்றில் வலி காணப்படும். மேலும் இத்துடன் பல்வேறு அறிகுறிகளும் காணப்படும். எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை உடனே  பார்ப்பது நல்லது.
 
அறிகுறிகள்:
 
தொப்புளைச் சுற்றி வலி முதலில் தொப்புள் பகுதியில் தான் வலி இருக்கும். பின்பு இந்த வலியானது படிப்படியாக அடிவயிறு வரை பரவும்.
 
வலியானது முதலில் தாங்கக்கூடிய வலியாக இருந்து பொறுக்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போகும். இவை சில மணிநேரங்களுக்குள் ஏற்படும். இந்த வலியால், நம்மால்  எந்த வேலையிலும் ஈடுபடமுடியாது.
 
வயிற்று வலியுடன் சாதாரண காய்ச்சலும், காணப்படும். அழற்சி மிக அதிகமாகும் போது காய்ச்சலின் வேகமும் அதிகமாகும்.
 
இந்நோயில், அடுத்த முக்கியமான அறிகுறி, குமட்டலும் அதனைத் தொடர்ந்து வாந்தியும், காணப்படும்.
 
பலருக்கு வயிற்று வலியுடன் கூடவே வயிற்றுப்போக்கும் காணப்படும். சிலருக்கு சீழ் கலந்த கழிச்சல் ஏற்படும். இந்த நிலையில் உங்கள் மருத்துவரை உடனே அணுகி மருத்துவத்தை  மேற்கொள்ள வேண்டும்.
 
ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிவது அசாதாரண அறிகுறிகள் இல்லை என்றாலும் வயிற்று வலியுடனே இவை இருந்தால், மருத்துவரை உடனே ஆலோசிப்பது நன்று.
 
உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள உங்களது அடிவயிற்றை நன்கு அமுக்கிப் பார்க்கவும். அப்போது பொறுக்க முடியாத வலி இருந்தால், இது  குடல்வால் அழற்சியினால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளவும்.
 
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது வயிற்று உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த வலி காணப்படுகிறது.