சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் உண்டாகும் ஆபத்துக்கள்...!
நமது உடல் தேவையானவற்றை ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:
ஒரு நாளில் 6 முதல் 10 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. இத்தகைய சிறுநீரினை நீண்ட நேரம் அடக்குவதால் சிறுநீரைத் தடுப்பதால் நீர்க்கட்டு, புண், கட்டிகள், சீழ் கோர்த்த வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
இயல்பான உடல் இயக்கத்தினால் உருவாகும் நச்சுக்கள் சிறுநீரகத்தால் உறிஞ்சப்பட்டு சிறுநீர் வழியே வெளியேறும். சிறுநீரினை அடக்குவதால் அதில் உள்ள நச்சுக்கள் சிறுநீர்ப்பையைத் தாக்கும் பின்பு சிறுநீர் பாதையையும், சிறுநீரகத்தையும் தாக்கும்.
சிறுநீர் நீண்ட நேரம் சிறுநீர்ப்பையிலேயே தங்கியிருப்பதால் நுண்கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு. சிறுநீர்ப்பாதை வழியே உட் செல்லும் ஒரு நுண் கிருமி சிறிது நேரத்தில் பல மடங்கு அதிகரித்து விடும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படும். குளிருடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி ஏற்படும்.
சிறுநீர் கழிக்காமல் நீண்டநேரமிருப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து பலமிழக்கும். இதனால் சிறுநீர்ப்பையின் செயல்பாடு மாறுபடும். உட்புறம் தசைத் தொய்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போதும் அடி வயிற்றில் வலி ஏற்படும். இதன் தொடர்ச்சியாக சிறுநீரினைக் கட்டுப்படுத்தும் திறனும் குறையும்.
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும். மேலும் கவனச்சிதறல் ஏற்படும். இதனால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது.
ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.