தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா...?
மனிதர்கள் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம்.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.
தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.