ஓவர் நைட்ல என்ன பண்ண? இழுத்து மூடிட்டு ஓட தான் முடியும்: வோடபோன் பரிதாபம்!!
வோடபோன் நிறுவன வழக்கறிஞர் நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்த வற்புறுத்தினால், நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை ஜனவரி 23 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கெடு தேதி முடிந்தும் அப்பணம் செலுத்தப்படாத நிலையில், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டது.
இதனிடையே ஏர்டெல், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்தியுள்ளது. இதை தவிர்த்து ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. அதேசமயம், வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு சுமார் ரூ.53,038 கோடி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரூ.2,500 கோடியை மட்டும் வோடபோன் ஐடியா செலுத்தியுள்ளது. மேலும் ரூ.1,000 கோடியை வரும் வெள்ளி கிழமைக்குள் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வோடபோன் நிறுவன வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேசியுள்ளதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் வோடபோன் நிறுவனம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது. எனவே நிலுவை தொகையை ஒரே இரவில் செலுத்த வற்புறுத்தினால், நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும்.
இதனால் நேரடி ஊழியர்கள் 10,000 பேர் உள்பட மொத்தம் 50,000 பேர் உடனடியாக வேலையிழப்பை நேரிடுவதுடன் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் அச்சம் தெரிவித்தார்.