தீபாவளி கொண்டாட கூறப்படும் சில நிகழ்வுகள்......
ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
1. ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!
2. இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.
3. வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர் - சீதாதேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.
தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள். குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.