வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (15:28 IST)

தீபாவளி நாளில் வழிபாடு செய்யப்படும் லட்சுமி குபேர பூஜை!!

வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையை லட்சுமி குபேர பூஜை என்று வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள், இந்த லட்சுமி குபேர பூஜையைச் செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும், தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். பின்னர் படத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.
 
சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து அதில் நவதானியங்களை பரப்பி, நடுவில் செம்பில் நீர் நிரப்பி, மாவிலை கொத்தை  சொருக வேண்டும். அதன் நடுவில் உள்ள தேங்காயில் மஞ்சள் பூசவேண்டும்.
 
வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து  கலசத்துக்கு முன்பாக வைக்கவேண்டும். வாழை இலையின் வலது புறத்தில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கவேண்டும். முழுமுதற்  கடவுளான விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
 
லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விஷேசம். குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும் மீண்டும்  தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதால் நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது குபேர  பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபடவேண்டும்.
 
குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.