1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (11:03 IST)

தீபாவளி: கேதார கௌரி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது...?

இந்த விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கடைபிடிக்கப்படும். 

21 நாள்களும் இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள், பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை 14 நாள்கள் செய்வது நல்லது. அதுவும் இயலாதவர்கள், தீபாவளி அன்று இந்த நோன்பினை மேற்கொள்ளலாம். 
 
இந்த கேதார கௌரி விரதத்தை மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று   கூறப்படுகிறது.
 
விரதம் மேற்கொள்ளும் நாளில், மாலைவரை உபவாசம் இருந்து மாலையில் பூஜை செய்ய வேண்டும். முதலில் கலசத்தை தேங்காய், மாவிலை கொண்டு  அலங்கரித்து வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், நைவேத்தியங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து  நைவேத்தியம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு, அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும்.
 
அனைத்து பூஜைகளுக்கும் முதன்மையானது, பிள்ளையார் பூஜை. மஞ்சளில் சிறு பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். பிள்ளையார் பூஜை முடிந்ததும், பிரதான கேதார கௌரி விரத சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். 
 
சங்கல்பம் என்பது ஒரு பூஜையை எங்கு, என்று, எந்த வேளையில், எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சொல்லி, அந்தக் காரண காரியங்கள் செவ்வனே நடக்க இறைவனைத் தொழுதுகொள்வதாகும். பின்பு அஷ்ட திக் பாலகர்களை வணங்க வேண்டும். பின்பு, பிரதான பூஜையான சிவபெருமானை தோத்தரிக்கும்  அஷ்டோத்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
அதன்பின், கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்யலாம். கேதார கௌரிவிரதம், அனைத்து  நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதமாகும்.