1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (10:02 IST)

யார் இந்த வாடகை தாய்கள்? இவர்களுக்கு சட்டத்தில் அனுமதி உள்ளதா??

வேறு தம்பதியினரின் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள்.

 
கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள்.
 
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு தம்பதிக்கு அவர்களின் கருவை தன் கர்ப்பப் பையில் சுமந்து குழந்தை பெற்றுக்கொடுப்பது. 
 
இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய். இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். அதாவது ஆணின் விந்தனுவரும் வாடகைத்தாயாய் இருக்கும் பெண்ணின் முட்டையும் கொண்டு குழந்தை பெற்றெடுக்கப்படும். 
வெளிநாடுகளில் இது சாதனமானது என்றாலும் இந்திய கலாசாரத்திற்கு இது புதிதே. நடிகர் அமிர்கான், நடிகை ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா ஆகியோர் வாடகைத்தாய் மூலமே குழந்தை பெற்றுள்ளனர். இதனிடையே இந்தியாவில் வாடகைத்தாய் சட்ட திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும். தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
 
வாடகைத்தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகை தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.வாடகைத் தாயாக வருபவருக்கு பணம் கொடுக்கக் கூடாது. தம்பதிக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. திருமணமாகாத அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதியில்லை.