ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (15:43 IST)

முப்பதாண்டு காலப் போராட்டம்!

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரானப் போராட்டம் அய்யா ஒய். டேவிட் அவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் வழிகாட்டுதலோடு 1980-களின் இறுதிப்பகுதியில் தொடங்கி இன்றுவரை நடந்து வருகிறது.

 
கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சக்கட்டப் போராட்டம் கூடங்குளம் கிராமத்தில் தொடங்கி,  இடிந்தகரை  கிராமத்தில் தொடர்ந்தது. அந்த உக்கிரமானப் போராட்டம் 2014-ஆம் ஆண்டு முடித்துக்கொள்ளப்பட்டது.
 
அதன் பின்னர் கடந்த ஏழாண்டுகளில் (2014-2021) வழக்குகள், ஆளுமைகள் சந்திப்புக்கள், மாநாடுகள், கலந்தாலோசனைகள், கருத்தரங்குகள், நாடு தழுவிய தொடர்வண்டிப் பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என்று அணுஉலைப் பிரச்சினையை உயிரோட்டத்தோடு வைத்திருக்கிறோம். பற்பல அரசியல் தலைவர்களும், இயக்கத் தோழர்களும் இதற்கு உதவி வருகின்றனர்.
 
பத்தாண்டுகளுக்குப் பிறகும் கூடங்குளம் போராட்ட வழக்குகள் குறித்துப் பேசிக்கொண்டும், இயங்கிக்கொண்டும் இருக்கிறோம். இன்று (பிப். 19, 2021) கடையநல்லூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். வழக்குகள் தொடர்பாக காவல்துறை, நீதித்துறை அதிகாரிகளோடுப் பேச, கலந்தாலோசிக்க, ஒத்துழைக்க அணியமாய் இருக்கிறோம்.
 
தங்களின் வாழ்வாதாரங்களுக்காக, வாழ்வுரிமைகளுக்காக அறவழியில் அமைதியாக, பொறுமையாகப் போராடி, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்காக, இளைஞர்கள், பெண்கள், ஆண்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதி கூறுகிறோம்.