செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (13:43 IST)

அரசியலில் இருந்து நானும் ஓய்வு பெறுகிறேன் – ரஜினி ஆதரவாளர் மாரிதாஸ் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்ததை அடுத்து மாரிதாஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணத்திற்கு ஆதர்வு அளித்தவர்களில் மாரிதாஸும் ஒருவர். பாஜக ஆதரவாளரான இவருக்கு ரஜினி கட்சி ஆரம்பித்ததும் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பிக்கப் போவதில்லை என கூறியதால் இப்போது மாரிதாஸ் தானும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் சமூகவலைதளப் பக்கத்தில் தனது அரசியல் ஓய்வை அறிவித்துள்ளார். அதில்
அனைவருக்கும் வணக்கம்,

என்னைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அனைவருக்கும் நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எழுதும் காலம் தொட்டு இன்று வரை என்னோடு முழுமையாக நின்ற அனைவருக்கும் நிச்சயம் நான் கடமைப்பட்டுள்ளேன். சமீபத்தில் தலைவர் ரஜினி அவர்கள் கட்சி அறிவிப்பு இல்லை என்பதை அவர்களே உறுதியாக வெளியிட்ட பின் உருவாகியுள்ள விவாதங்களில் என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்க விரும்புகிறேன்.

அதற்கு முன் மாற்று அரசியல் சார்ந்து நான் உருவாக்கிய , உங்களுக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு , வாக்குறுதிகளுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இறைவன் மீது ஆணையாக உங்கள் எவரையும் ரஜினி சார் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றவோ இல்லை திசை திருப்பி நான் பெயர் எடுக்கவோ நினைத்தவன் அல்ல. ஆம் நான் ஒரு நம்பிக்கையை உங்களுக்குக் கொடுத்தேன் அது இன்று பொய் என விமர்சிக்கப்படுகிற நிலைக்கு நானே காரணம் என்பதால் நான் அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து நான் மாற்று அரசியலை இளைஞர்கள் ஆன்மீகம் , அரசியல் இரண்டும் பிடித்துக் கொண்டு நகர்வதற்கு தக்க ஒரு நேர்மையான , நாணயமான ஆட்சியாளர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்தால் என்ன என்ன நன்மைகள் எந்தவிதமான நன்மைகள் ஒவ்வொரு துறையிலும் எதிர் பார்க்கலாம் என்று புள்ளி விவரங்களை ஆதாரங்களோடு முன் வைத்தேன். தவிர அதில் ஏமாற்றும் எண்ணம் எனக்கில்லை. உண்மையாக 60 வருடம் மேல் இங்கே நடக்கும் வெறுப்பு அரசியலை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என்று நினைத்தேன். அதனால் அதற்கான முயற்சியை தீவிரமான எடுத்து முன்வைத்தேன். அதற்காக ரஜினி பெயரை பயன்படுத்துக் கொண்டேன் என்று சொல்வது மனதிற்கு வேதனையாக உள்ளது. எது எபப்டி என்றாலும் நான் ரஜினி முன் வைத்து செய்தது போல் உங்களுக்கு தோன்றி இருந்தால் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து எதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்று சிலர் கூறுவதில் இருக்கும் நியாயம் புரிகிறது ஆனால் “மாரிதாஸ் நேற்று ரஜினி எதிர்பார்த்தான் அவர் இல்லை என்றதும் அந்த கட்சிக்கு சென்று விட்டான்” அவனும் ஒரு சராசரி அரசியல்வாதி என்ற பேச இடம் கொடுக்க விரும்பம் இல்லை. ஆனால் தற்சமயம் அரசியல் எனக்கு வேண்டாம் அது என் நோக்கத்தை களங்கபடுத்தும் தவிர உண்மையை உணர செய்யாது. இது பற்றி இந்த குழப்பமான நேரத்தில் இதை பற்றி முடிவெடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்.

அடுத்து? நான் என் மட்டத்தில் என்ன முடியுமோ மாணவர்கள் இளைஞர்களுக்கு அதை ஆரோக்கியமான விசயங்களை எடுத்து சென்று சேர்க்க முயற்சிப்பேன். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியோ , நடிகைகள் பற்றியோ பேசி என் பக்கம் பார்வையாளர்களை கொண்டு வர முயற்சிக்க மாட்டேன். தேசத்திற்கு ஆரோக்கியமான விசயங்களை கொண்டு சேர்க்க என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன்.

தலைவர் ரஜினி எடுத்த முடிவு தவறு கிடையாது. நம் தாய் தந்தையருக்கு என்றாலும் அதே தான் நாம் நினைப்போம் என்பதால் அதில் குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு நீடித்த உடல் நலமும் மன அமைதியும் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது கொண்ட நம்பிக்கை , அன்பு, மரியாதை என்றும் மாறாது.

நல்லது நடக்கும்..

நான் களைப்பாக உள்ளேன்;

நான் முதல் முறையாக சோர்வாக உணர்கிறேன்.

எனவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.

மீண்டும் களத்திற்கு வருவதும் வராமல் ஒதுங்குவதும் கடவுள் விருப்பம்.
நன்றி..

ஏற்கனவே ரஜினி ஆதரவாளர் தமிழருவி மணியனும் மரணம் வரை மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.