புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (12:40 IST)

இதற்காகதான் கோஹ்லி ரசிகர்கள் ஸ்டீவை கிண்டலடித்தார்களா? – சிறப்பு கட்டுரை

நேற்று நடந்த உலக கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கிண்டலடித்ததும், அதற்கு விராட் கோஹ்லி “கிண்டலடிக்க வேண்டாம் ஊக்கப்படுத்துங்கள்” என சைகையில் தெரிவித்ததும் இன்று வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ஆனால் ரசிகர்கள் என்ன சொல்லி ஸ்மித்தை கிண்டல் அடித்தார்கள் என்பது பலருக்கு தெரியாது. அது தெரிய வேண்டுமென்றால் கோஹ்லிக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையே நடந்த ஒரு சண்டையை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

2015 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இதே ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதிக்கொண்டன. அப்போது விராட் கோஹ்லி இளைஞர்களின் சாதனை நாயகன் (இப்போதும்தான்). அப்போது அனுஷ்கா சர்மாவோடு அவர் காதலில் இருந்தார். எப்போதும் ஒரு சதம் அடித்ததும் அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருக்கும் இடம் நோக்கி ஒரு முத்தத்தை பறக்க விடுவதை ரசிகர்கள் கொண்டாட்டத்தோடு பார்ப்பார்கள். ஆனால் 2015ல் நடந்த கதையே வேறு. இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் துவண்டு போன நேரத்தில் கோஹ்லி களம் இறங்கினார். அடித்து துவைக்க போகிறார் என ரசிகர்கள் ஆராவாரத்தில் இருக்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் இழந்து தோற்றுபோனார். கோபமான ரசிகர்கள் விராட் கொஹ்லியை வறுத்தெடுத்துவிட்டனர். அவரையும், அவருடைய காதலி அனுஷ்கா சர்மாவையும் தவறாக சித்தரித்து பல போஸ்ட்டுகளை போட்டு தங்கள் ஆத்திரத்தை தீர்த்தனர். அன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து ஆட்ட நாயகனாக ஆனார்.

அன்றிலிருந்தே ஸ்டீவ் ஸ்மித் மேல் இந்திய ரசிகர்களுக்கு ஒரு கடுப்பு இருந்து கொண்டே இருந்தது. எங்களுக்கும் காலம் வரும் என காத்திருந்தனர். அந்த காலமும் வந்தது. 2018ல் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடியது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் ஒரு விஷமம் செய்தார். ஆப்பிரிக்க அணி ஒழுங்காக பேட்டிங் செய்யக்கூடாது என்பதற்காக பவுலிங் போடுவதற்கு முன்பு பந்தை உப்புதாள் போட்டு தேய்த்து விட்டு எறிந்தார். இதனால் பந்து சீக்கிரம் விரிசல் அடைவதுடன் தளத்தில் சரியாக போகாது. இஅவருடைய இந்த விஷம தனத்தை கேமராவில் பார்த்துவிட்ட அதிகாரிகள் ஸ்மித்துக்கு விளையாட தடைவிதித்து துரத்திவிட்டார்கள்.

அன்று ஸ்மித்துக்கு இந்திய ரசிகர்கள் வைத்த பெயர்தான் “சீட்டர்” (ஏமாற்றுபவன்). நேற்று நடந்த மேட்ச்சில் ஸ்மித் ஃபீல்டிங்கை சரிபடுத்தியபோது ரசிகர்கள் அவரை “சீட்டர்.. சீட்டர்” என்று கிண்டலடித்து கத்தினார்கள். அதற்கு விராட் கோஹ்லி “அவரை கிண்டல் செய்ய வேண்டாம். உற்சாகப்படுத்துங்கள்” என சைகை செய்தார்.

எந்த உலககோப்பையில் ஸ்மித்திடம் கோஹ்லி தோற்றாரோ அதே உலக கோப்பையில் அதே ஸ்மித்தை இன்று வெற்றி கொண்டதுடன், அவரை கிண்டல் செய்தவர்களை கண்டித்து மேதை நிலையை அடைந்துவிட்டார். அதனால்தான் “உலகம் எவ்வளவு சின்னது பாத்தீங்களா” என ரசிகர்கள் அந்த காட்சியை எல்லா வலைதளங்களிலும் பரப்பி வைரல் ஆக்கி வருகின்றனர்.