1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (16:56 IST)

பிறந்தநாளை விவசாயிகளுக்கு சமர்ப்பித்த யுவ்ராஜ் – தந்தைக்கு எதிராக கருத்து!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளான் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல தெரியவில்லை. இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவ்ராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் போராட்டக் களத்துக்கு சென்று பேசினார்.

அப்போது சிலர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியதை பற்றி செய்தியாளர்களிடம் யோகராஜ் சிங் ‘நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதைதான் அறுப்பீர்கள். இந்த மாதிரி உணர்வு பூர்வமான நேரத்தில் அதுபோல பேசுவது தவறில்லை’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இந்து பெண்களைப் பற்றியும் இழிவுபடுத்தி பேசியதாக சொல்லி பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் அவரைக் கைது செய்ய சொல்லி ஹேஷ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர். அதன் பின்னரும் பேசிய யோகராஜ் சிங் ‘விளையாட்டு வீரர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு அளித்த விருதை திரும்ப அளிக்கவேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவ்ராஜ் சிங் தனது பிறந்தநாளை விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ‘விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். என் பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தீர்வு காணப்பட வேண்டும் என நினைக்கிறேன். என் தந்தை யோகராஜ் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன், வேதனைப்படுகிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய கொள்கைகளைப் போல என்னுடையது இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.