செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (09:03 IST)

டாஸ் வென்றாலும், தோற்றாலும் பிரச்சினையே இல்ல! – கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா!

இன்று இந்தியா – நியூசிலாந்து இடையே உலக கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் டாஸ் வெல்வதை பற்றி கவலையில்லை என இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.



உலக கோப்பை ஒருநாள் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த 2019ம் ஆண்டில் இதேபோல அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.

அதற்கு பதிலடியை இந்திய அணி இந்த போட்டியில் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் உள்ளது. பலரும் இந்தியா டாஸ் வென்றால்தான் வெற்றி இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதை மறுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “நியூசிலாந்து அணியின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்துள்ளோம். வான்கடே மைதானத்தில் டாஸ் வெல்வதோ, தோற்பதோ ஆட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்தது நினைவில் இருக்கிறது என்றாலும், அதை யாரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. எப்படி சிறப்பாக விளையாடுவது, எப்படி ஆட்டத்தை மேம்படுத்துவது என்பதில்தான் நாங்கள் கவனமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K