கோலியை அணியில் சேர்க்க லஞ்சம் பெற்றது யார்? - ஜேட்லிக்கு ஆம் ஆத்மி கேள்வி


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 2 ஜனவரி 2016 (13:19 IST)
விராட் கோலியை 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டெல்லி அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டது யார்? என்று ஆம் ஆத்மி கட்சி அடுத்த கேள்வியை தொடுத்துள்ளது.
 
 
கடந்த டிசம்பர் மாதம் ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த விராட் கோலி “14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இடம் கிடைக்காமல் போனது என்னை மனதளவில் பாதித்தது. உங்களுக்கே தெரியும், தில்லி கிரிக்கெட் சங்கம் செயல்படும் விதம்.
 
ஏதாவது கவனித்தால் மட்டுமே அணியில் இடம்பெற முடியும் என்ற நிலையில், எனது அப்பா அதை நிராகரித்துவிட்டார். ஆனால் சிறப்பான ஆட்டம் மூலம் அடுத்த ஆண்டே நான் தில்லி அணியில் இடம் பிடித்துவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், விராட் கோலியின் நேர்காணலை சுட்டிக்காட்டி விராட் கோலியின் தந்தை பிரேம் கோலியிடம் லஞ்சம் கேட்டது யார்? என்று புதுடெல்லி கிரிக்கெட் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அருண் ஜெட்லியிடம் ஆம் ஆத்மி கட்சி அடுத்த கேள்வியை எழுப்பியுள்ளது.
 
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவர்களுல் ஒருவரான ஆஷூதோஸ், “விராட் கோலி தனது நேர்காணலில் 14 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இருந்து விலக்கப்பட்டதிற்கான காரணத்தை தெளிவாக கூறியுள்ளார்.
 
அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது 2001 - 2003 ஆண்டு காலகட்டத்தில் விராட் கோலியின் தந்தையிடம் லஞ்சம் கேட்டது யார்? நாங்கள் அருண் ஜேட்லி மீதுதான் குற்றம் சுமத்துகிறோம். இதற்காக விராட் கோலியின் எதிர்காலம் பாழாக்கும் வகையில், அருண் ஜேட்லி அவரை குறிவைத்து வேட்டையாடக்கூடாது” என்றூ குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :