1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2016 (18:00 IST)

மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன்: உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் பெண்கள் உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணி.


 
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.
 
ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் மெக் லன்னிங் மற்றும் வில்லனி ஆகியோர் தலா 52 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டாற்றின் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.3 ஓவரில் வெற்றி இலக்கான 149 ரன்னை மூன்று விக்கெட்டை இழந்து எட்டியது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹேலே மேத்யூஸ் 66 ரன்னும், டெய்லர் 59 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஃபர்ரெல் மற்றும் பீம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.